ஐ.தே.க.வை சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளர்!

ஐ.தே.க.வை சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளர்!

முன்பு குறிப்பிட்டதை போல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி (புதன்கிழமை) ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஓரிரு தினங்களாக சபாநாயகர் கரு ஜயசூர்யாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதன்போது சபாநாயகர் மற்றும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நாட்டு மக்களுக்கு ஒன்றைக் கூறவேண்டும், சபாநாயகரின் நிலைப்பாடு வேறு, எனது நிலைப்பாடு வேறு. அவர் எங்கு பெரும்பான்மை இருக்கின்றதோ அதற்கு சார்பாகவே கருத்துக்களை கூறிவருகின்றார்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத இவர்கள் கடந்த நாட்களாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

அதேநேரம் நான் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். நான் அறிந்த வகையில் கரு ஜயசூரியவை அவ்வாறு முடக்க முடியாது. பெரும்பான்மை இல்லாமையினாலேயே அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.

நான் மகாநாயக்க தேரர்களை சந்திக்கச் சென்றபோது ஊடகங்களுக்கு ஒருவிடயத்தைக் கூறியிருந்தேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஒரு பொது வேட்பாளரை முன்நிறுத்துவதாகக் கூறியிருந்தேன்.

அதன் மூலம் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்குவோம் என்பதைக் கூறியிருந்தேன்.” என தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net