கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறது!
இலங்கையில் ஆட்சிபீடமேறிய சகலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர்களை கைவிடும் அல்லது ஏமாற்றும் நிலையே காணப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்று சமவுரிமையுடன் வாழ்வதற்கான வேலைத்திட்டங்களில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளதென்றும் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு மத்தியில், ஆட்சிபீடமேறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணப்படுகிறது.
பிரதமர் மாற்றம் மற்றும் நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதோடு, அதே நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணியும் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு தரப்பினரது ஆதரவை பெறும் முனைப்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு தீவிரமாக செயற்படுகிறது.
எவ்வாறெனினும், எந்தத் தரப்பிற்கும் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கமாட்டோம் என்றும் நடுநிலையாகவே செயற்படுவோம் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்தது.
இதேவேளை, அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக சகல விடயங்களும் இடம்பெற வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதோடு, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது குறித்த இணக்கப்பாடுகளின் பிரகாரமே ஆதரவு வழங்குவது குறித்து சிந்திக்கப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.