புற்று நோய் போன்று பரவிய மைத்திரியின் சூழ்ச்சிதிட்டம்!
ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டம் புற்று நோய் போன்று பரவியுள்ளது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சத்தியாக் கிரக போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பினை குப்பை கூடையில் இட்டுவிட்டு நாகரீகமற்ற மோசமான ஆட்சியை முன்னெடுக்க ஜனாதிபதி எடுத்து வரும் முயற்சிக்கு அனைத்து மக்களும் வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளியிட வேண்டும்.
ஜனநாயக ரீதியில் நாட்டை ஆட்சி செய்வதாக ஆட்சி பீடம் ஏறிய மைத்திரிபால சிறிசேன, குரோத ஆட்சிக்கு தலைமை தாங்கும் அளவிற்கு கொடூரமானவராக மாறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு கிடைத்த மக்கள் ஆணையை நிராகரித்துள்ளார். அவருக்கு இப்பொழுது மக்கள் ஆணை கிடையாது.
அவருக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களை குழியில் தள்ளும் அளவிற்கு ஜனாதிபதி கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி எடுத்த தீர்மானம் கொடூரமானது.
இந்த நாட்டின் பிள்ளைகளது எதிர்காலத்தையே இல்லாதொழிக்க முயற்சிக்கப்படுகின்றது.
ஜனநாயகம், வாழும் உரிமை மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றை அழிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இந்த சத்தியாக்கிரக போராட்டம் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒர் சமிக்ஞையாக அமையும்.
விஹாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடுபவர் என்றால் மைத்திரிபால சிறிசேன நாடு அராஜகமாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.