குழப்ப நிலைக்கு மத்தியில் சஜித்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாவதில் எந்த மாற்றமும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்று வரையிலும் பிரதமர் பதவிக்கு மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் உரிமை கோரிவருகின்ற நிலையில், அரச செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட போதிலும், அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்கப்போவதில்லை என்பதிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்து வருகின்றார். இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என பலரும் கோரி வருகின்ற நிலையில், கட்சிக்குள்ளும் இதனால் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெருக்கடியான இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என கட்சியின் பெரும்பான்மையினோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.