நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறலாம்: அரசியல் அவதானிகள்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் வாபஸ் பெற முடியுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் கடந்த 9 திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
குறித்த அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய பல கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இதன்போது கடந்த 13ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் 7 ஆம் திகதிக்கு குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர், ஜனாதிபதி இடையீட்டு மனுவை தாக்கல் செய்து வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற முடியுமென சட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவாராயின் தற்போதைய நாடாளுமன்றத்தை 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை கொண்டு செல்ல முடியுமென அரசாங்கத்தின் சிரேஸ்ட்ட அமைச்சர்களில் ஒருவரான எஸ்.பி. திஸாநாயக்க தெரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.