‘கஜா’ புயல் பாதிப்பு: முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை!

‘கஜா’ புயல் பாதிப்பு: முதலமைச்சருடன் மத்திய குழு ஆலோசனை!

கஜா புயல் பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள மத்திய குழு உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

குறித்த சந்திப்பையடுத்து அவர்கள் தலைமைச் செயலாளருடனும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கஜா புயலினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன.

இதில் பலர் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோர், வீடுகள், உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடியை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி ஆய்வு அறிக்கையினையும் கேட்டது.

இதற்கமைய, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு விஜயம் செய்தனர்.

மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழுவினர், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய குழு உறுப்பினர்கள், அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற மத்திய குழுவினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவர்கள் நாளையும் நாளை மறுதினமும், புயல் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு, சேத விவரங்களை கணக்கிட்டு மத்திய அரசுக்கு, அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இந்த அறிக்கைக்கு அமைய, மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி உதவியை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net