உகண்டாவில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு!
உகண்டாவில் கட்சி விழிப்புணர்வுக்காக பயணிகள் படகொன்றில் சென்ற 30 பேர் வரை படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் அளவிற்கு அதிகமானோர் பயணித்தமை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற அனர்த்தம் நேர்ந்துள்ளதாக உகண்டா பொலிஸார் தெரிவித்தனர்.
உகண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள விக்டோரியா ஏரியில் கட்சி விழிப்புணர்வுக்காக சுமார் 84 பேர் பயணித்ததாகவும், அவர்களுடன் பாரம்பரிய இராச்சியத்தின் இளவரசர் ஒருவரும் சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்றைய அனர்த்தத்தின் போது 27 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், எண்ணிலடங்காதோர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விக்டோரியா ஏரியில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்லும் இவ்வாறான படகுகள் மற்றும் கப்பல்கள் வழமையாக விபத்துக்களை எதிர்நோக்குகின்றன.
இதேபோன்று கடந்த செப்டெம்பர் மாதம் தான்சானியாவில் உல்லாச பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் அதிகளவானர்கள் உயிரிழந்தனர்.
அதேவேளை, கடந்த 1966 ஆம் ஆண்டு விக்டோரியா ஏரியில் பயணித்த எம்.வி.புகாபா என்ற பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.