ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றால் பிரச்சினைகள் தீரும்!

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றால் பிரச்சினைகள் தீரும்!

நாட்டினது தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக் கொண்டால் பிரச்சினையை சுலபமாக தீர்த்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போதைய குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது அரசியலமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒன்றாக கருதப்படுகின்றது.

அத்துடன் குறித்த வர்த்தமானி நாடாளுமன்றக் கோட்பாடுகளுக்கும் முரணாக காணப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமாக செயற்பாட்டை எதிர்த்து உயர்நீதிமன்றினை நாடி நாம் வெற்றியடைந்துள்ளோம்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றால் பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.

மேலும் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொண்டால் உடனடியாக ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றது.

எனவே பெரும்பான்மை ஆதரவினைக் கொண்டுள்ளவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒழுங்காக வெளியேறுவதே பொருத்தமாக அமையும்” என அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net