முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவசியமில்லை!

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தலுக்கு அவசியமில்லை!

முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என பிரதமராக தொடர்ந்தும் உரிமை கோரும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தலே தேவை என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் அதிகார இழுபறி தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி நழுவல் போக்குடன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ’ தற்போதைய நிலையில் பிரச்சனை நாடாளுமன்றத்தில் தான் உள்ளது.

அந்த வகையில் இந்தக்கட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை’ என மேலும் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 26ம் திகதி தாம் தற்காலிக அரசாங்கத்தையே பொறுப்பேற்றதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்ட பொதுத் தேர்தல் வரையில் மாத்திரமே அது நீடித்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்த போதிலும் அது தற்காலிகமாக நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுக்கும் எந்தவொரு நோக்கத்தையும் தாம் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் மீள ஆரம்பமானபோது எவ்வாறு நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோன்று தற்போதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அறிக்கையினூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net