இலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்!

இலங்கையின் அரசியல் செயற்பாடு பாரிய விளைவை ஏற்படுத்தும்!

இலங்கை அரசியலில் தற்போது நீடிக்கும் குழப்பநிலை, பாரிய விளைவை ஏற்படுத்துமென மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”இந்த சட்டவிரோதமான அரசாங்கத்தின் ஊடாக, ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படும் விதம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் ஆளும் தரப்பு இன்று வெற்றிடமாகியுள்ளது. மறுபுரத்தில் சட்டவிரோதமான முறையில் அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இது நூறுவீதம் மக்களின் ஆணையை மீறும் ஒரு செயற்பாடாகும். நாடாளுமன்றில் அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும்.

இவ்வாறான நிலையில், சிறிதுகூட வெட்கமின்றி அரசாங்கத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறார்கள். தேசியம் மட்டுமல்லாது சர்வதேசம்கூட இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

மஹிந்த தரப்பினரின் குற்றங்களை மறைப்பதும், ஜனாதிபதி மீண்டும் அடுத்தத் தேர்தலில் ஜனாதிபதியாகவும்தான் இந்த சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

அவர்களால் நாடாளுமன்றுக்குக்கூட வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்யப்போகிறார்கள்? மெதமுலனயில் இருந்தா நாட்டை ஆட்சி செய்யப்போகிறார்கள்?

நம்பிக்கையில்லா பிரேரணை வேண்டாம் என்றால் உங்களுக்கு பெரும்பான்மை உள்ளது என்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு நாம் சவால் விடுக்கிறோம். இதனை நாளை மறுதினமே வாக்கெடுப்புக்கு எடுங்கள் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இதில் வெற்றிபெற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனைவிடுத்து ஏன் ஒழிந்து விளையாட வேண்டும்? இவர்களுக்கு சார்பாக சில ஊடகங்களும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net