ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்!
நாடாளுமன்றத்தில் நான்கு முறைகளுக்கு மேலாக பெரும்பான்மையை நிரூபித்து காட்டி விட்டோம்.
இதனால் சட்டவிரோத அரசாங்கம், ஆட்சி அதிகாரத்தை தங்களிடம் விரைந்து கையளிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடவிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பை புறக்கணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கிய சட்டவிரோத அரசாங்கத்திடம் 113 பேர் இல்லையென்பது தற்போது உறுதியாகியுள்ளது.
மக்கள் ஆணையின் கீழ் ஆட்சிக்கு வருகின்றவர்கள் சட்டவாட்சியை காப்பாற்றி மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியமாகும்.
இதனால் கடந்த 30 நாட்களாக ஜனநாயகத்துக்கு முரணாக சட்டவிரோத ஆட்சியில் ஈடுபட்டமையை நிறுத்திவிட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள தரப்பினருக்கு ஆட்சி பொறுப்பை ஜனாதிபதி கையளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நாடாளுமன்றத்தில் இன்றும் பெரும்பான்மையை நாம் நிரூபிக்க தயாராகவுள்ளோம்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.