சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்

சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் ஜனநாயக அமையம் எனும் தமிழின் குரல் அமைப்பினரால் இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது

வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து பல சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது வாழ்வோடு அரசியல் பகடை ஆடாதீர்கள்,நீங்கள் எமக்காய் உங்கள் வாழ்க்கையை தெலைத்தீர்கள் நாம் உம்மோடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல சிவில் சமூகக் குழுக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கைதுகள், போராளிகள் மற்றும் தமிழ் இளைஞரிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளதுடன், அவ்விதமான அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் ஓர் இடர்பாடான மனோநிலைக்கு தம்மைத் தள்ளும் என்பதை வலியுருத்தி, ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள போராளிகளின் பாதுகாப்பு கருதிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கிழக்குமாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகமவிடம் கையளித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net