ரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை!

ரணிலை பிரதமராக நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட விருப்பத்துக்கு அப்பால் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டை இதற்கு முன்னர் ஆட்சி செய்த ஜனாதிபதிகள், தங்களுக்கு விரும்பாதவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ. விஜேதுங்க, 1994 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமித்துள்ளார்.

அதேபோன்று,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் 2004ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டியேற்பட்டது.

அந்தவகையில் ஜனாதிபதிக்கு ரணிலுடன் வேலைசெய்ய முடியுமா? இல்லையா? என்பது தனிப்பட்ட விடயமாகும்

எனவே தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள ரணில் சட்டரீதியாக பிரதமராக நியமிக்க வேண்டியது அவசியம்” என ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Copyright © 3916 Mukadu · All rights reserved · designed by Speed IT net