இலங்கையில் அமெரிக்க கப்பலின் தற்காலிக தளம்!

இலங்கையில் அமெரிக்க கப்பலின் தற்காலிக தளம்!

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் ஜோன்ஸ்டெனிஸ் இலங்கையில் தற்காலிக விநியோக தளமொன்றை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கடலில் விநியோகங்கள், ஆதரவு மற்றும் ஏனைய சேவைகளை பெறுவதற்காகவே இந்த தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படை இலங்கையுடன் கடற்படை தொடர்பான ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவதை சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த விநியோக தளத்தை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திர பகுதியில் நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையினருக்கு விநியோகங்களை வழங்குவதற்காக தற்காலிகமாக இந்த தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

தற்காலிக தளத்தின் கேந்திர முக்கியத்துவத்தை விமானமொன்று ஆராய்ந்த பின்னர் அமெரிக்க கப்பலிற்கு விநியோகங்களை கொண்டுவந்தது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

தற்காலிக வான்வெளி விநியோக தளம் விமான ஓடுபாதைகளை பயன்படுத்துவதற்கும் உரிய பொருட்களை தக்க தருணத்தில் பெற்றுக்கொள்வதன் மூலம் கப்பல்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏனைய பல நடவடிக்கைகளிற்கும் உதவியாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்த நடவடிக்கைகளின் போது துரித விநியோகங்களை வழங்குவதற்கும் தற்காலிக தளங்களை பயன்படுத்த முடியும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net