வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் தேவை!
நாட்டினது அரசியல் குழப்பநிலையினால் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வஜிராஷ்ரம விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடைக்கால அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்தமையின் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன.
அவற்றினைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கவேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. அத்துடன், தற்போது நாட்டில் அரசாங்கம் இல்லாத காரணத்தினால் பாதுகாப்புக் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது. வடக்கு – கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டினதும் பாதுகாப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.