தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை!
தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“இன்று அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்த்திருக்கின்றனர்.
பிரதமர் மற்றும் அமைச்சுகள் உள்ளபோதிலும் அமைச்சுகள் செயற்பட முடியாதுள்ளன. நாட்டின் நிர்வாகப் பொறுப்பு தனி ஒருவராக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அது தொடர்பில் நான் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. ஜனநாயகத்தை சக்திமிக்கதாக மாற்றும் நாட்டில், தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை.
பிரதமர் மற்றும் அமைச்சர்களின் நிர்வாகம் இன்றி நான் மிகவும் பொறுப்புடன், பொறுமையாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.
நீதிமன்றம் இந்த நிலைமையை புரிந்துகொண்டு, ஜனநாயகத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிபதற்கும் ஏதுவான தீர்ப்பொன்றை வழங்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் நான் ஏற்றுக் கொள்வேன். தீர்ப்பிற்கு அமைய எதிர்கால நடவடிக்கைகைள முன்னெடுப்பேன். அமைச்சுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டாலும், முப்படையினர் தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்கின்றனர்“ என தெரிவித்துள்ளார்.