கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம்!

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில் மண்டபத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தற்போது நாடு பூராகவும் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் தனியார் பரீட்சார்த்தியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதி புரத்திற்கு அண்மையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 43 வயதினையுடைய ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

அவ்வாறு விண்ணப்பித்தவருக்கு பாரதிபுரம் பரீட்சை மண்டபத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முதல் நாள் பரீட்சையான சமய பாடப் பரீட்சைக்கு பரீட்சார்த்தி சமூகமளிக்கவில்லை. மறுநாள் தமிழ் பாடத்தின்போது சமூகமளித்த நிலையில் பரீட்சை மேற்பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இருப்பினும் முதலாவது வினாத்தாள் விநியோகிக்கப்பட்ட நிலையில் பரீட்சார்த்தியின் அடையாள அட்டை பரீட்சிக்கப்பட்டுள்ளது.

அதன்போது விண்ணப்பதாரிக்கு 43 வயது கடந்த நிலையில் உள்ளதனை காண்பித்தபோதும் பரீட்சையினை எழுதியவருக்கு 30 வயதும் இருக்காது என மேற்பார்வையாளர் இனம் கண்டுகொண்டார்.

இதனால் உடனடியாக மாவட்ட மேற்பார்வையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்பார்வையாளர்கள் அடையாள அட்டையினை துருவித் துருவி ஆராய்வதனால் மாட்டிக்கொள்ளப்போவதனை பரீட்சை எழுதியவரும் ஊகித்துள்ளார்.

இதன் பிரகாரம் முதலாம் பகுதி வினாத்தாள் எழுதிய இடைவெளியில் இரண்டாம் பகுதி வினாத்தாள் எழுதாமலேயே மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இருப்பினும் முதலாம் பகுதி வினாத்தாள் எழுதியதன் அடிப்படையில் உள்ள பெயர் விபரங்களின் அடிப்படையில் குறித்த விண்ணப்பதாரி மற்றும் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் தொடர்பில் இனம் கண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net