நாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்பு!
அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணமாகும். நீதி மன்றமும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எல்லை மீறி செயற்படுமாக இருந்தால் அரசாங்கம் என்றவகையில் சட்டத்தை நிலைநாட்டவேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அமைச்சரவை ஒன்று இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு இயங்க முடியாது. நாட்டில் இந்த நிலை ஏற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணமாகும்.
அத்துடன் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவும் பாதிப்பாக இருக்கின்றபோதும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். என்றாலும் நாட்டின் இந்த நிலைக்கு நீதிமன்றமும் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்