மக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்!

மக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்!

மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி, தலதா மாளிகையில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

“அதிகார பிரச்சினையால் இந்தப் பிரச்சினை வரவில்லை. ஆனால், இந்த பிரச்சினையில் நீதிமன்றம் மத்தியஸ்தம் வகித்தமையாலேயே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இது பாரதூரமான நிலைமையாகும். எமது செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானமொன்றைக் கொண்டு வரவிருந்தேன்.

ஆனால், இந்தப் பிரச்சினையால் அனைத்துச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார். அவருக்குத் தான் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகிறது. எம்மைப் பொறுத்தவரை இது கலைக்கப்பட்ட நாடாளுமன்றமாகும்.

இப்படியான நாடாளுமன்றுக்கு நாம் சென்று பலனில்லை. மேலும், ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுப்பதற்கு ஜே.வி.பி. ஆதரவளிக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

நாம், பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியடைவோம் என்று நம்பிக்கையுள்ளது. மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது

. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம். இதற்காகவே நான் மக்களுக்கான சலுகைகளை வழங்கினேன்.

இது பிரசாரத்துக்காக மேற்கொண்ட செயற்பாடல்ல. மாறாக, விலைக் குறைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிந்த காரணத்தினால் தான் அதனை செய்தோம்.

இப்போது, நாம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பார்த்துள்ளோம். உலகில் எந்தவொரு நீதிமன்றமும் இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்கவில்லை. இதற்கெதிராகவே நாம் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம்.

எனவே, மக்கள் எமக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதுவே எனது கோரிக்கையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net