தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்!

தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்!

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல.

எனவே அவர்களது போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சில தொழிற்சங்கங்கள் தற்பொழுது இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் முன்வந்துள்ளார்கள்.

இது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆகையால் இப் போராட்டம் வெற்றிப்பெறும் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை உண்டு.

ஆயிரம் என்ற குறிக்கோளிலிருந்து இ.தொ.கா மாறுபட போவதில்லை. மாறாக எம்மிடம் கடைசியாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகள் இணைத்ததாக 925 ரூபாய் என்ற அடிப்படைக்கு வந்தார்கள்.

இந்த தொகை தொழிலாளர்களுக்கு போதுமான தொகையாக இல்லை. இதை அனைவரும் உணர்வார்கள்.

ஆகையினால் மேலும் எமது ஆயிரம் ரூபாய் இலக்கை நோக்கிய பயணத்திற்காக அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 6 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் வேறு எந்த பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net