நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம் என அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.தே.க. தவிர்ந்த வேறொருவரை பொதுவேட்பாளராக களமிறக்கினால் பின்னர் ஆபத்திலேயே முடிவடையும் என நான்கு வருடங்களுக்கு முன்னரே தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மல்வத்து மகாநாயக்கத் தேரரை சந்தித்ததையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நாட்டில் இடம்பெற்றுள்ள இந்தப் பிரச்சினை, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இதனால், நாட்டுக்கு தற்போது பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நெருக்கடியை வெகுவிரைவில் இல்லாதொழிக்க வேண்டும்.

ஒரு தரப்பினருக்கு சாதகமாக அன்றி, மத்தியஸ்தமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தாக இருக்கிறது.

எனவே, இதுதொடர்பில் மூன்று தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, உடனடித் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

4 வருடங்களுக்கு முன்னர், நான் இந்தப் பிரச்சினை தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தேன்.

அதாவது, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அன்றி, இன்னொருவரை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டாம் என்று அறிவித்திருந்தேன். இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பலனும் ஏற்படாது என்றும் கூறினேன்.

ஆனால், என்னை கட்சியிலுள்ள சிலர் துரோகியாக அடையாளப்படுத்தினார்கள். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சுமத்தி, நான் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலைமைக்கும் தள்ளினார்கள்.

அப்போது நான் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது? நான்கு வருடங்களுக்குப் பின்னர் நான் கூறியது அவ்வாறே இடம்பெற்றுள்ளது.

நான் அன்று கூறியதை கட்சியின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்களாயின், இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அன்று நான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியொருவரையும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தையும்தான் எதிர்ப்பார்த்தேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் மாற்றமொன்றை தற்போது எதிர்ப்பார்க்கிறார்கள். இது தலைமை பொறுப்பிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

24 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 4 ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளார். எனவே, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றே மக்கள் கருதுகிறார்கள். இதனை, கட்சியின் தலைமை கவனத்தில் எடுக்கவேண்டும்” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net