ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்!

ரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்கி வருமாகவிருந்தால் எதிர்க்கட்சியிலிருந்து கூட்டமைப்பு விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சர்களின் விலையினை 500 மில்லியனாக நிரூபித்ததன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதி கூறினார்

ஆனால் ஜனாதிபதியின் கூற்றை திரிவுப்படுத்தி மாற்று கருத்துக்களை உருவாக்கினர்.

தற்போதும் எமது கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் செயற்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருகின்றது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அடுத்த அரசியல் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களை கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ரணிலுக்கு தொடர்ச்சியாக கூட்டமைப்பு ஆதரவினை வழங்கி வருமாயின் எதிர்க்கட்சியிலிருந்து முழுமையாக கூட்டமைப்பு விலக வேண்டியது அவசியம்” என டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net