இன்று பாராளுமன்றம் கூடுகிறது!

இன்று பாராளுமன்றம் கூடுகிறது!

அமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவு

பாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா இல்லையா என்ற தீர்மானத்தை இன்று காலை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னரே தீர்மானிப்பர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் ஜோன் செனவிரத்ன எம். பி. நேற்றுத் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஆளும் கட்சியினர் ஜனாதிபதியுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டதுடன் இன்று காலை விசேட கட்சியத் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் சம்பிரதாயங்களுக்கிணங்க சபை நடவடிக்கைகள் இடம்பெறும்வரை அமர்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஆளும் கட்சியினர் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஆளும் கட்சியினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் அவர்கள் பாராளுன்றத்துக்கு சமுகமளிப்பர் என்றும் நேற்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, இன்று முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தவுள்ளார்.

பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகள் கலந்துரையாடுவதற்காகவே மேற்படி கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net