கிறிஸ்து பிறப்பு மாதத்தில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!
பிரேசிலின் கம்பினாஸ் நகரில் இயேறு கிறிஸ்துவின் பிறப்பு மாதத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தேவாலயத்தினுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பொலிஸாரின் தலையீட்டை தொடர்ந்து, துப்பாக்கிதாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி, 49 வயதுடைய தகவல் தொழில்நுட்ப தொழில்முறையாளரான யூலர் பெர்னாண்டோ காண்டோல்ஃபோ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராலயத்திற்குள் வந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவாறு சந்தேகநபர் திடீரென வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்த நிலையில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.