கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்ற ரணில்! எழுத்து மூலமான ஆவணம் கையளிப்பு !

கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்ற ரணில்! எழுத்து மூலமான ஆவணம் கையளிப்பு !

நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளை ஏற்று செயற்பட இணங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அதற்கான உறுதி ஆவணம் இன்று கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பிலும், கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்று அதை செயற்படுத்துவதற்கான உறுதிப்பாட்டு ஆவணம் கையெழுத்திட்டு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த போதும், இதுவரையில் எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்படவுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நேற்று மதியம் கூடி ஆராய்ந்தது.

கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது என்றால், நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அதை செயற்படுத்தலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்துமூல உறுதிப்பாட்டு கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்ட கருத்தை சம்பந்தனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரை நடைபெற்றுள்ளது.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 8 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அது நிறைவேற்றப்பட வேண்டியது முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன் புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் பேசப்பட்டு இணக்கம் எட்டப்பட்டது. காணி விடுவிப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினர் ஆக்கிரமித்துள்ள காணிகள் மாத்திரமல்ல, வனவள திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ள காணிகளும் மக்களுக்கு மீள கையளிக்கப்படவேண்டும் என கூட்டமைப்பு விதித்த நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் எத்தகைய அபிவிருத்தி பணிகளும், கூட்டமைப்புடன் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையையும் ரணில் ஏற்றுக் கொண்டார்.

கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளை செயற்படுத்துவது தொடர்பான எழுத்துமூல உறுதிப்பாட்டு ஆவணம் இன்று வழங்கப்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net