சம்பளப்பிரச்சினைக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை!
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் (புதன்கிழமை) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ம் திகதி காலை 10 மணியளவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனத்துடன் முன்னெடுக்கப்போவதாக என்னிடம் உறுதியாக தெரிவித்தார்.
அதேவேளை இன்று முன்னெடுக்கப்படும் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பை வாபஸ் பெற்று தொழிலாளர்களை தொழிலுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டார்.
இதனடிப்படையிலேயே நாட்டின் தலைவர் ஒருவரின் வார்த்தைக்கு நம்பிக்கை வைத்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட நாம் தீர்மானித்தோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எதிர்வரும் 16ம் திகதி சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.