நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை, அரசியலமைப்பு என்பன பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.