அதிகாரத்தை கைவிட மகிந்த இணக்கம்?
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விரைவில் அதிகாரத்தை கைவிடக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான உச்சநீதிமன்றின் தீர்ப்பு நேற்று மாலை வெளியாகியிருந்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் அமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்தனர்.
இந்த சந்திப்பு கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அரசாங்கத்தை கைவிட்டு எதிர்க்கட்சியில் ஆசனத்தில் அமரவேண்டியதன் அவசியத்தை பெரும்பாலன உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு வெளியான பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.