களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தையில் தடைப்பட்டிருந்த வேலைத்திட்டம் மீளவும் ஆரம்பம்!
மட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபையினால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் முன்னெடுக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் பணி தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தைக்கு வரும் மக்களினதும், வர்த்தகர்கள் மற்றும் பிரயாணிகளினதும் நன்மை கருதி தடைப்பட்டிருந்த பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் அமைக்கப்படும், துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அப்பகுதி கமநல அமைப்பு செயற்பட்டு வந்தமை மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும் என பொது மக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் பலமுறை குறித்த அமைப்பினரிடம் கலந்தாலோசித்தும், அவற்றிற்கான தீர்வு எட்டப்படாத நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் தறுவாயில் இருந்தது.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபை தவிசாளர் ஞா.யோகநாதன் மற்றும் உறுப்பினர் மே.வினோராஜ் ஆகியோரின் முயற்சியின் பலனாக இவ்வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் அன்றாடம் வரும் மக்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பான தரிப்பிடமின்றி வெட்டவெளிகளில் வைக்கப்படுகின்றது.
இதனால் பறவைகளின் எச்சங்கள், வெயில், மழை போன்றவற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இந் நிலையில் இதற்கு கட்டணமும் அறவிடப்படுகின்றன.
இதனால் தினமும் பொதுச் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள், வியாபாரிகள் என பலரும் பலத்த சிரமத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதற்கான பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுப்பது பிரதேச சபையினுடைய கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






