நாளைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயருக்கு அழுத்தம்!

நாளைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயருக்கு அழுத்தம்!

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குமாறு சபாநாயகருக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”மஹிந்தவிற்கு கிடைக்கவிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடந்தமுறை இல்லாமல் செய்யப்பட்டதைப்போல் இந்த முறை முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் எதிர்த்தரப்பில் இருக்கிறது.

எதிர்க்கட்சிகளில் அதிக ஆசனத்தை நாமே கொண்டுள்ளோம். எனவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த பதவி கிடைக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்ப ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.

ஐக்கிய சேதிய முன்னணிக்கு 113 ஆசனங்கள் இருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பு அதன் 14 உறுப்பினர்களுடன் அதற்கு ஆதரவு கொடுத்ததால், ஐக்கிய தேசிய முன்னணி 117 ஆசனங்களைக் காண்பித்துள்ளது.

இந்த அரசாங்கத்தை உருவாக்கவும், பாதுகாக்கவும் செயற்படும் ஒரு கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இந்த அரசாங்கத்திற்கு ஒக்சிஜனைக் கொடுப்பதும் அவர்களே.

எனவே கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட முடியும்? இங்கு தெளிவான குழப்பம் இருக்கிறது.

அரசாங்கத்தைப் பாதுகாக்க, அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியின் தலைவர் எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர முடியும்?

இதனால் என்ன நடக்கும்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை வைத்துக்கொண்டு சம்பந்தன் அரசியலமைப்புச் சபையில் அமர்கிறார்.

அதில் உள்ளடங்கும் ஒன்பது உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களை சம்பந்தன் மற்றும் ரணில் தரப்பு எடுத்துக்கொள்கிறது.

இந்த அரசியலமைப்புச் சபைதான் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்து சகல செயற்பாடுகளையும் மேற்கொள்ளும். எனவே அந்த சபையினை எவ்வாறு நாம் சுயாதீன சபை எனக் கூறமுடியும்? அது ரணில் சம்பந்தரின் சபையாகும்” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net