இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை!

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை!

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறபித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத்தன்மைகள் தொடர்பாகவும் அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அவற்றைத் தாண்டி மக்களுக்கு சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக வட, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு குறித்து விசேடமாக ஆராயப்பட்டது.

மேலதிகமான பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அது சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

கூட்டமைப்பினர் உள்ளிட்டவர்கள் கூறிய கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி, சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

மேலும், 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், வட, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், அந்த காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, யாழ்.இராணுவ கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சி உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net