புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுக்கமான தீர்மானத்திலிருந்து விலகி, நாடாளுமன்றின் பெரும்பான்மைக்கு இணங்க ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, மீண்டும் நல்லாட்சி அரசாங்கத்துக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், புதிய அரசாங்கத்துக்கான அமைச்சரவை இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் எவ்வாறாயினும், இரண்டு தரப்பினருக்குமிடையில் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வரவு- செலவுத் திட்டத்துக்கு பதிலாக அடுத்த இரண்டு மாதத்துக்கான கணக்கறிக்கையும் எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதில் அரச பணியாளர்களின் சம்பள விவகாரம், அவசர கொடுப்பனவுகள், அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை சலுகைகள், மானியங்கள், வெளிநாட்டுக் கடனை மீள செலுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net