மைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்!

மைத்திரி- மஹிந்த இணைப்புடன் 65 இலட்சம் வாக்குகளை பெறுவோம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இணைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ 50 நாட்களிலேயே பதவியிலிருந்து விலகினார்.

தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஆனால், இது எமக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகிறோம்.

50 நாட்களுக்கு முன்னர் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட தற்போது எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

எமக்கு 96 உறுப்பினர்கள் தற்போது உள்ளார்கள். ஜனாதிபதியின் ஒத்துழைப்பும் எமது தரப்புக்குத் தான் கிடைத்துள்ளது. அத்தோடு, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தும் எமக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையில், எமது வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது. மைத்திரி- மஹிந்த தரப்பினரின் இணைப்புடன் எமக்கு 65 இலட்சம் வாக்குகள் கிடைக்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எமது தரப்பிலிருந்து மூவர் சென்றுள்ளனர். அவர்களும் அரசாங்கத்தில் தாங்கள் இணைந்துக்கொண்டமைக்கு பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்ற நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்பதுவே உண்மையாகும்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net