காணிகள் விடுவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படும் காணிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விடுவிக்கப்படும் காணிகள் முழுமையான பரிசோதனைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களின் காணிகள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இராணுவம் முறைப்படி விடுவித்து வருகின்றது. எனவே நிலம் விடுவிப்பது என்பது ஒரு புதிய அனுபவம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் இதுவரை 90% தனியார் நிலங்களும் 87% அரச சொத்துகளும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்தோடு நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இராணுவம் புரிந்து கொண்டு, அரசு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற அடிப்படையில் நிலத்தை விடுவிக்கிறது என்றும் அவர் கூறினார்.