மஹிந்தவுடனான உறவில் பாதிப்பு ஏற்படாது!
பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

நாங்கள் இணைந்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஏற்படுத்தவுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாங்கள் ஜனநாயக அரசியல் சக்தியாக பணியாற்றவுள்ளோம். அத்துடன் பல கட்சிகளை இணைத்துக் கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஏற்படுத்திச் செயற்படுவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பநிலையால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான உறவில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
அத்துடன் ஊழல் நடவடிக்கைகளிற்கு எதிரான எனது போராட்டத்தை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.
இலஞ்ச ஊழல், அரசியல் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் போன்ற பாதகமான நடவடிக்கைகளை இல்லாதொழித்து புதிய கலாசாரத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
நான் எனது நாட்டு மக்களின் தேசத்தின் நலனிற்காக எனது பதவிக்காலம் முழுவதும் நிறைவேற்று அதிகாரங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.