தமிழர்களை புலிகளாக நோக்கினால்… அமைச்சரொருவரின் எச்சரிக்கை!

தமிழர்களை புலிகளாக நோக்கினால்… அமைச்சரொருவரின் எச்சரிக்கை!

நாட்டின் தமிழ்ப் பிரஜைகளை விடுதலைப் புலிகள் என்று நோக்கினால், இலங்கைக்கு எதிர்காலம் என்பது இல்லாமல் போய்விடும் என அமைச்சர் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தெற்கில் 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர் அப்படி நினைக்கவில்லை. 1988, 89,90ஆம் ஆண்டுகளில் தேசப்பற்றுள்ள அமைப்பினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அந்த காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் கொலை செய்யப்பட்டனர்.

அந்த பிரச்சினைகள் முடிந்த பின்னர், சம்பவங்களை எதிரான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

தெற்கில் நடந்த இரண்டு கிளர்ச்சியின் போது ஏற்பட்ட சம்பவங்களை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் வடக்கில் நடந்த கிளர்ச்சியை பார்க்க வேண்டும்.

ஆனால் வடக்கில் நடைபெற்றதை நாம் அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

நாட்டின் அரசாங்கம், அந்த பெரும்பான்மைக்கு எதிராக ஆயுதங்களை கையில் எடுத்தால், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது உயிரிழப்புகள் ஏற்படும்.

அவர்கள் இறந்த பின்னர், பௌத்தர்கள் என்ற வகையில் அவர்களை நினவுகூர சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம்.

கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்கில் மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க நாங்கள் சந்தர்ப்பம் வழங்கி வருகிறோம்.

அதேபோல் வடக்கிலும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இதனால், வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை என்பது சமமானது.

ஐக்கிய தேசிய முன்னணி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சக்தியாக இருக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி இலங்கையர்கள் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 4120 Mukadu · All rights reserved · designed by Speed IT net