மைத்திரிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வரப்படுமா?
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்படுவது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு ஒன்றை நியமித்து நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை தவறானது அல்ல என்றாலும் தனிநபர்களை அரசியல் ரீதியாக இலக்கு வைத்தோ அவர்களை அழிக்கும் நோக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அதில் எந்த பயனும் இல்லை.
ஊழல், மோசடிகளை கண்டறியும் உண்மையான நேர்மையான தேவை ஜனாதிபதிக்கு இருக்குமாயின், முதலில், மிக் விமான ஊழல், அவன்கார்ட் கொடுக்கல்,வாங்கல், இராணுவத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டமை உட்பட 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடந்த ஊழல், மோசடிகளை விசாரிக்க வேண்டும்.
மிக் விமான கொள்வனவு தொடர்பான ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டமானது பிணை முறி கொடுக்கல வாங்கலில் ஏற்பட்ட நஷ்டத்தை விட 20 மடங்கு பெரிய நஷ்டம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தாஜூடீன், லசந்த விக்ரமதுங்க, ஹெக்னேலிகொட ஆகியோர் சம்பந்தமான குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் இந்த கொலைகளுக்கு கட்டளையிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக மேலும் பல விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.