ஜனாதிபதி தொடர்பில் மறைக்கப்படும் ரகசியம்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் ரகசியம் பேணப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

வேட்பாளர் தொடர்பான தகவலை அறிவிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்கள் போன்று அவசரப்பட மாட்டோம். எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை கூற மாட்டோம். இறுதி நேரம் வரை அது இரகசியமாக தான் இருக்கும்.
அவசியமான நேரத்தில் எங்கள் வேட்பாளர் யார் என்பதனை வெளியிட்டு எதிரிகளிடம் சிக்க மாட்டோம்.
பாரியதொரு முன்னணியாக தாங்கள் களமிறங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் சமகால ஜனாதிபதியுடன், சர்ச்சைக்குரிய பிரதமராக குறுகிய காலத்தில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பளராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரகசியம் பேணப்போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.