எதிர்க் கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள்!

எதிர்க் கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள்!

எதிர்க் கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியனார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று இந்த நாட்டில் பொறுப்புக்கூறக்கூடிய தலைமைத்துவம் ஒன்று இல்லாது போய்விட்டது.

ஜனாதிபதி பிரதமர் இடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. பிரதமர் நாட்டின் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார்.

பலமான எதிர்க்கட்சி என கூறிக்கொண்டு செயற்படும் எவரும் உறுதியாக இல்லை. அவர்களும் அதிகார மோகத்தில் மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ அணியினர் எந்த நேரமும் அவர்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் சட்ட விரோதமாக பிரதமர் பதவியை கைப்பற்றினர். அது பறிபோனதும் இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றி பாரளுமன்றத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாடாளுமன்ற அமர்வுகளின் போதெல்லாம் அவர்கள் எதிர்க்கட்சி ஆசனம் குறித்த நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வந்தனர்.

அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தனை காலம் எதிர்க்கட்சி அதிகாரத்தில் இருந்தது, ஆனால் பிரதான எந்தவொரு பிரச்சினையையும் அவர்கள் கையாளவில்லை. மாறாக வடக்கின் ஒரு சில அரசியல் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசினார்கள்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உண்மையாக பொறுப்பினை சரியாக செய்து வருகின்றோம்.

மக்களின் நேரடியான பிரச்சினைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே கலந்துரையாடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

ஆகவே எமக்கு அங்கீகாரம் இல்லாது போனாலும் கூட இன்றும் உண்மையான எதிர்க்கட்சி நாம் தான்.

மக்கள் எமது கொள்கையை, நிலைப்பாட்டினை ஆதரித்து மக்களின் மூலமாகவே அதிகாரத்தை வழங்கும் வரையில் எமது போராட்டம் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும்.” என கூறினார்.

Copyright © 1052 Mukadu · All rights reserved · designed by Speed IT net