மாவனெல்ல சம்பவத்தின் பின்னணியில் கூட்டமைப்பு!

மாவனெல்ல சம்பவத்தின் பின்னணியில் கூட்டமைப்பு!

புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தற்போது இனக்கலவரம் ஒன்று தேவைப்படுகின்றது. அரசாங்கம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் பங்காளிகளாக செயற்படுகின்றது.

இவ்வாறான நிலையில், பொது மக்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என கோருகின்றேன். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது ஏற்பட்ட தோல்வியை மறைக்க அம்பாறையிலும், கண்டியிலும் இனப்பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தனர். இதனை பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.

இந்நிலையில், அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை மூடிமறைக்க இவ்வாறு புத்தர் சிலைகளை உடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் மவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net