ஐம்பது நாட்களில் ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது!

ஐம்பது நாட்களில் ஏற்பட்ட இழப்பை அளவிட முடியாது!

56 தினங்களாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையும், வீழ்ச்சியையும் வார்த்தையாலோ அல்லது பெறுமதியாகவோ குறிப்பிடமுடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் ரீதியாக செயல்படும் பாடசாலை அதிபர்களினால் அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்காக மேற்கொள்ளும் எந்த நன்மையான நடவடிக்கைகளும் பெற்றோர்களுக்கோ, மாணவர்களுக்கோ தெரியப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போது எமது நாட்டில் இலவச கல்வி பெரும் முன்னேற்றமடைந்துள்ளது. 1977 காலகட்டத்தில் ஜே.ஆர். ஜயவர்தன பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களை இலவசமாக வழங்கும் செயற் திட்டத்தை ஆரம்பித்தார்.

அதேபோன்று, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தற்போதைய கல்வியமைச்சர் ‘அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள் அல்லாத 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் தற்போதைய அரசாங்கத்தினால் காப்புறுதி செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், அரசியல் சிந்தனையுடன் செயலாற்றும் அதிபர்களினால் அரசாங்கத்தின் இத்தகைய சிறந்த திட்டங்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியவருதில்லை.

56 நாட்களுக்குள் நாட்டில் சதியொன்றை மேற்கொண்டு நாடு வீழ்ச்சியடைவதற்கு நடவடிக்கை எடுத்தனர். மீண்டும் அதனைக் கட்டியெழுப்ப முடியாத நிலையில் அவர்கள் பின்னடைவு கண்டனர்.

மேற்படி வீழ்ச்சியை வார்த்தையால் கூற முடியாது. எனினும் அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது எவ்வாறு என சிந்தித்து வருகின்றனர். மீண்டும் தான் ஜனாதிபதியாவது எவ்வாறென தீட்டம் தீட்டி வருகின்றனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படியென யோசித்து வருகின்றனர்.

எம்மால் அதிகாரத்தை வைத்துக்கொண்டு மாத்திரமன்றி அதிகாரமில்லாமலும் மக்களுக்கு சேவைசெய்ய முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net