நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்ப முயற்சி!
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களுக்கு பொய்யான கருத்துக்களை கூறி, மீண்டும் இனவாதத்தை பரப்ப சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”இந்த ஆண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கிறது. மாகாணசபைகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ளன.
அதேபோல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் கடப்பாடும் எமக்கு உள்ளது.
மேலும் இந்த அரசாங்கத்துக்கு நீண்ட காலம் பயணிப்பதற்கான பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில், பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டிய நிலைமையிலும் நாம் காணப்படுகிறோம்.
தேர்தல்களின்போது இனவாதம் பரப்பப்படுவது நாட்டின் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது. தெற்கில் மஹிந்த தரப்பினரால் இனவாதப் பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை ஜே.வி.பி. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. யுத்தத்துக்குப் பின்னர் எமது நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து மக்களுக்கும் உரித்தான அரசியலமைப்பை நாம் கொண்டுவர வேண்டும். இதனாலேயே, 78ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
சிலர், பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படும் எனக் கூறுகிறார்கள்.
ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும். தற்போது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பிலேயே நாடாளுமன்றில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
அரசியலமைப்பை, ரணில் விக்ரமசிங்க, சுமந்திரன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்றாப்போல, செய்ய முடியாது. இதற்கான பல கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.