கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்! ஈழத் தமிழர்களை கலங்க வைத்த தருணம்.
மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அன்பை நேசிக்கும் அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கடிக்கச் செய்திருக்கிறது.
ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு அன்று இறைபதம் அடைந்தார்.
புனித மிக்கேல் கல்லூரியின் கொடி போர்க்கப்பட்ட அடிகளாரின் உடல்….

தனது 21வது வயதில் மட்டக்களப்பையடைந்த அவர் தன் இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் அந்த மண்ணைவிட்டு நீங்கவில்லை.
போர்க் காலத்திலும், தான் காலடியெடுத்து வைத்த நிலத்திலேயே தங்கி அம்மண்ணுக்காகவும் அந்த மக்களிற்காகவும் தன்னுடைய வாழ்க்கையை இறையன்போடும் இறை பணியோடும் அர்ப்பணித்திருந்தவர் பெஞ்சமின் ஹரி மிலர்.
மக்களுக்காக உழைத்த பரிசுத்த இதயத்தின் உடமைகள் இவைதான்…

இறை பணிக்காகவும், மக்கள் தொண்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அருட்தந்தையின் வாழ்வு மிக தூய்மையாக எளிமையாக அமைந்திருந்தது.
தான் வாழ்ந்த காலத்தில் ஆடம்பரத்தை விரும்பாத அவர், தன்னுடைய இறுதி நிமிடங்கள் வரையும், மற்றவர்களுக்காக, இல்லாதவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார்.
தங்கியிருந்த அறையில் எந்தவிதமான ஆடம்பரப் பொருட்களோ அன்றி தேவையற்ற பொருட்களையோ அவர் பாவித்தது இல்லை.
தங்குமிடம் தொடங்கி சென்ற இடம் வரையிலும் அவரின் மிகச் சாதாரண ஆடம்பரம் அற்ற வாழ்க்கையை காண முடியும். அப்படி மக்களின் தொண்டையே தன் மூச்சாக் கொண்ட அருட்தந்தையைப் பிரிந்து அப்பகுதி மக்கள் மிகத் துயரில் இருக்கிறார்கள். இறைவனடி சேர்ந்தாலும் அவரின் தூய ஆவி என்றும் அவர் நேசித்த மண்ணோடும் மக்களோடும் ஒன்றாகியிருக்கும்.
கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன். இயேசு சபையின் மற்றுமொரு மதகுருவான அமெரிக்கர், லொரியா அடிகளார் கண்ணீர் வடிக்கிறார்.

இதேவேளை, போர் மேகங்கள் சூழப்பட்ட காலத்தில் சமாதானக் குழுவினூடாக அருட்தந்தை மில்லர் ஆற்றிய பணிகள் நேர்மறையானவையாகும். அப்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டமை, இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றவர்களைக் கண்டுபிடிக்க உதவியமை, யுத்தத்தின் போது இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கியமை என, அருட்தந்தை மில்லரின் பணிகள் பரந்து விரிந்தவையாக இருந்ததன.
மக்களோடு மக்களாக வாழ்ந்த அடிகளாருக்கு பிற மதகுருமாரின் இறுதி அஞ்சலி.

கிறித்தவர்கள் மட்டுமன்றி சகோதர இனத்தவர்களையும், மதத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அன்பைப் போதித்தார். இதனால் அவரின் இறுதி நிகழ்வுகளிலும் சகோதர மதத்தவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
அருட்தந்தை மில்லர் – இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
