போதைப் பொருள் விற்கும் பெண்ணின் வீட்டில் பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடை மீட்பு!

போதைப் பொருள் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சீருடை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 2ம் திகதி இரவு ஜாஎல பிரதேசத்தில் வீடொன்றை சுற்றி வளைத்து சோதனையிட்ட போது 12 லட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன், அதனை விற்பனை செய்த பெண் ஒருவரையும் கைது செய்தனர்.
இதன் போது வீட்டிலிருந்து குற்ற விசாரணைப் பிரிவில் பணியாற்றி வரும் பொலிஸ் சார்ஜன் ஒருவரின் அதிகாரபூர்வ சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
“குமார் சேகர ஜீ 31118” என்னும் பொலிஸ் அடையாள இலக்கத் தகடும் பொலிஸ் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சீருடைக்குச் சொந்தக்காரர் குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வருவதாகவும் அடிக்கடி தமது வீட்டுக்கு வந்து செல்வதாகவும் கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்ட வழக்குப் பொருட்களில் ஒன்றாக பொலிஸ் சீருடையையும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைப்பினை நடத்திய தருணம், சீருடை மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் போதைப் பொருள் விநியோகம் செய்தாரா என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் நீதிமன்றில் தகவல்களை வழங்கியுள்ளனர்.