தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை அமைச்சர் ஹரிஸ்

வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கு இடம்பெறும் கூட்டத்திற்கு வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று(05) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வெள்ளம் அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறிப்பாக எனது அமைச்சின் கீழ் வருகின்ற விவசாயம், நீர்பாசனம், கமநல சேவைகள், மீன்பிடி போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்திற் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் அவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாட்டில் இல்லாததன் காரணமாக தனது செயலாளரை அனுப்பியிருக்கின்றார்.
மற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீன் சுகயீனம் காரணமாக வரவில்லை தனது பிரதேச சபை தவிசாளர் ஒருவரை அனுப்பியிருக்கின்றார். ஏனைய எவரும் கலந்துகொள்ளவில்லை என்றும் அமைச்சர் ஹரிஸ் தெரிவித்தார்.