மைத்திரி எதிர்நோக்கும் சவால்களின் போது அவரோடு இருப்பேன்!
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் சவால்களின் போது, அவரை கைவிடாது அவரோடு இருப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.
இவ்வாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,

“எனது வீட்டில் 18 பேர் அடங்கிய குழுவொன்று கூடி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்கும் வேறு வழியில் கொண்டுசெல்வதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின.
எனது வீட்டு வளாகத்தில் அவ்வாறான குழுவொன்று சந்திப்பதற்கு நான் இடம் வழங்கியது பொய், இரசியங்களை மறைத்து, சூழ்ச்சி செய்வதற்கு இல்லை என்பதை நான் மிக தெளிவாகக் கூறுகிறேன்.
அவ்வாறான சூழ்ச்சியொன்று செய்ய வேண்டுமெனின், அதுபோன்ற பிரசித்தமான இடத்தில் கூட்டம் நடாத்தும் அளவிற்கு நான் சிறு குழந்தை அல்ல.
சூழ்ச்சியொன்றை நடத்துவதாயின், அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நான் கையெழுத்துக்களைப் பெற்றிருப்பேனா? இல்லையே?
இந்த கலந்துரையாடல் தொடர்பில் அன்றைய தினமே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவிடம் அனைத்து விடயங்களையும் ஒழிவுமறைவின்றி தெளிவுபடுத்தினேன்.
சூழ்ச்சியொன்று இல்லாததன் காரணமாகவே எதனையும் நான் மறைக்கவில்லை. ஜனாதிபதியால் இது குறித்து வினவப்பட்டபோது, எவ்வித மறைவுமின்றி நான் அறிவித்தேன்.
2018 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மாலை 3.15 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி அது குறித்து அறிந்துகொண்டார் என்பதை தெரிவித்துக்கொள்ள நான் விரும்புகின்றேன்.
இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் சவால்களின் போது, அவரை கைவிடாது அவரோடு இருப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.