இலங்கையின் மிக நீளமான சுரங்க ரயில் பாதையின் முதலாவது பயணம் ஆரம்பம்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதையான மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
பரீட்சார்த்தமட்டத்தில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையின் நிர்மாணப்பணிகள், மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது.இதன் முதற்கட்டத்தின் கீழ் இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 278 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், 26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதை, மாத்தறையிலிருந்து பெலியத்த வரையில் அமைக்கப்பட்டுள்ளது. சீன எக்ஸிம் வங்கி இதற்கான நிதியினை வழங்கியுள்ளது.
இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து அம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக அம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.