மன்னாரில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே!

மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இராஜதந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மன்னார் நகர்ப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
மன்னார் மனித புதைகுழியில் தற்போது 283 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அறிய முடிகின்றது.
குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதனை சுயாதீனமாக வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் மன்னாரில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை. அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுவதாக தெரிகின்றது. எதிர் காலத்தில் குறித்த நடவடிக்கைகள் மலுங்கடிக்கக்கூடாது.
இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும்.” என சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.