மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான தனி வீடுகள் கையளிப்பு

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 105 தனி வீடுகள் இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கபட்டன.

மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இந்த கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பத்தனை மவுண்ட்வேர்னன் தோட்டப் பகுதிக்கு 50 தனி வீடுகளும், போகாவத்தை தோட்டபகுதிக்கு 55 தனி வீடுகளும் அமைச்சரின் 52 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கையளிக்கப்பட்டன.

பசுமை பூமி வேலைத்திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்கு ஏழு பேச்சர்ஸ் காணியோடு இந்த வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதோடு, குடிநீர் வசதி, மின்சாரம், மலசலகூட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் 10 இலட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங் பொன்னையா, சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், எம்.ராம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net