ரூபாவின் பெறுமதியை பேண போராடும் இலங்கை அரசு!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காவிடின் நாட்டின் கடன் சுமையை பெரும்பாலும் குறைத்திருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. இதன்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேற்றைய அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இலங்கையில் அரசியல் நெருக்கடியானது ஏற்பட்டிருக்காவிடின் கடனை பெரும்பாலும் குறைத்திருக்கலாம். எனினும் ஜனநாயகத்தை வென்றது போல் பொருளாதார பிரச்சினையையும் விரைவில் நிவர்த்தி செய்வோம்.
அத்துடன் இலங்கையின் ரூபா பெறுமதியானது தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.